செம்மொழி மாநாட்டால் என்ன பயன்? நெடுமாறன் கேள்வி

ஞாயிறு, 14 மார்ச் 2010 (14:12 IST)
தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கூட தமிழ் பயிற்றுமொழியாக இல்லாத நிலையில், அடிப்படைகளைச் செய்யாமல், செம்மொழி மாநாடு நடத்துவதினால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், இது தொடர்பாக செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:

செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இங்கே மாவட்ட ஆட்சியர்களையும்,அமைச்சர்களையும் வைத்து மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி. இவர்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கூட தமிழ் பயிற்றுமொழியாக இல்லை. அடிப்படைகளைச் செய்யாமல், மாநாடு நடத்தி என்ன பயன் இருக்கப் போகிறது?

உலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி இருக்கைகள் நிதியின்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மாநாடு நடத்தும் கோடிகளைக் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கி ஆராய்ச்சி இருக்கைகள் தொடர வாய்ப்பு வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்