சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான மருத்துவ ஆய்வக பட்டயப்படிப்பு சேர்க்கை

திங்கள், 8 ஜூன் 2009 (16:01 IST)
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2009-2010 ஆம் ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக பட்டயபடிப்பு மற்றும் செவிலியர் உதவியாளர் (பெண்களுக்கு மட்டும்) பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையிலுள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2009-2010ஆம் ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக பட்டயபடிப்பு மற்றும் செவிலியர் உதவியாளர் (பெண்களுக்கு மட்டும்) பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளன. இப்பயிற்சிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் மற்றும் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மட்டும் நடத்தப்படும் பயிற்சிகளாகும்.

இப்பயிற்சிகளின் விவரங்கள்:

மருத்துவ ஆய்வக பட்டயபடிப்புக்கு (DMLT ) + 2 தேர்ச்சியும், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் (அல்லது) வாழ்க்கை தொழிற்கல்விப் பிரிவில் மருத்துவ ஆய்வகவியல் பயின்றவர்களாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் பொது பிரிவினர் பிற்பட்டவர்கள், மிக பிற்பட்டவர்கள் 45 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர், பிற்பட்டவர்கள், மிக பிற்பட்டவர்கள் 17 வயதுக்கு மேல் 30 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்கள் 30.06.2009 தேதியின்படி 17 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். ஆங்கிலத்தில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சிக்கான மாதக் கல்விக் கட்டணம் ரூ.300.

செவிலியர் உதவியாளர் ( பெண்களுக்கு மட்டும்) பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பயிற்சிக் காலம் 12 மாதங்கள் ஆகும். தமிழில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சிக்கான கல்விக் கட்டணம் ரூ.75/.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் '187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-81ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ.50ஐ பணமாக செலுத்தி விண்ணப்பப் படிவத்தை அலுவலக வேலநாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 10.07.2009 வரை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுமதிக்கும் கடைசி நாள் 10.07.2009 மாலை 5.00 மணிக்குள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்