சென்னை-திருப்பதிக்கு கோடைகால சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

புதன், 5 மார்ச் 2008 (13:27 IST)
இந்திய சுற்றுலா கழகம் சார்பில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு வாரத்திற்கு ஐந்து நாட்கள் கோடைகால சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து வாரம்தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 5.15 மணிக்கு பேருந்துகள் திருப்பதிக்கு புறப்படுகிறது. காலை 10 மணிக்கு திருப்பதி சென்று பிறகு, திருமலைக்கு செல்கிறது. இதனால், பகல் 12 மணி முதல் 3 மணிக்குள் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய முடியும். மாலை 6 மணிக்கு திருச்சானூர் சென்று பிறகு, இரவு 10 மணிக்கு சென்னை வந்துசேர்கிறது.

இந்த சென்னை- திருப்பதி சொகுசு குளிர்சாதன பேருந்தில் செல்ல கட்டணமாக காலை உணவு, மதிய உணவு லட்டு பிரசாதம் ஆகியவற்றுடன் பெரியவர்களுக்கு ரூ.1,000-மும், 5 வயது முதல் 10 வயது வரையிலான சிறுவர்களுக்கு ரூ.850-ம் வசூலிக்கப்படுகிறது.

வாலாஜா ரோட்டில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்து காலை 11 மணிக்கு திருமலைக்கு செல்கிறது. பகல் 12.15 மணிக்கு சாமி தரிசனம் செய்த பிறகு, பிற்பகல் 3 மணிக்கு திருச்சானூர் சென்று இரவு 11 மணிக்கு சென்னை வருகிறது.

இந்த சொகுசு பேருந்துகளில் காலை, மதிய உணவு, ரூ.100 தரிசன டிக்கெட் உட்பட பெரியவர்களுக்கு ரூ.1,000-மும், சிறியவர்களுக்கு ரூ.900-ம், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு பேருந்துகள் இயக்கப்படுகின்ற நிலையில், 115 இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. குளிர்சாதன பேருந்துகளில் பெரியவர்களுக்கு ரூ.840-ம், சிறியவர்களுக்கு ரூ.740-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளில் பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.640-ம், சிறியவர்களுக்கு ரூ.540-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர, ஆந்திர மாநிலம் சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் சென்னை மாம்பலத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் இருந்து திருப்பதி திருமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த பேருந்துகள் புறப்பட்டு திருமலை சென்று சாமிதரிசனம், திருச்சானூர், காளஹஸ்தி தரிசனம் ஆகிய இடங்களுக்கு சென்று இரவு 9 மணிக்கு சென்னை வந்து சேருகிறது. குளிர்சாதன பேருந்துகளில் காலை, மதிய உணவுகள், தரிசன டிக்கெட் உட்பட பெரியவர்களுக்கு ரூ.1,000-ம், சாதாரண பேருந்துகளில் ரூ.880-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்