சென்னை சி.பி.ஐ. ஆய்வாளருக்கு குடியரசுத் தலைவர் விருது

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (20:16 IST)
சென்னை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) லஞ்ச ஒழிப்புத் பிரிவின் ஆய்வாளர் கலைமணிக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது.

மத்திய புலனாய்வு பிரிவில் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றி பல்வேறு குற்றங்களை கண்டுபிடிக்க உதவியதற்காக இவர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த கலைமணி, கடந்த 1987ம் ஆண்டு மத்திய பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். 1995ம் ஆண்டு மத்திய புலனாய்வுத் துறை ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2000ம் ஆண்டு முதல் இத்துறையில் நிரந்தர ஆய்வாளராக தொடர்ந்துப் பணியாற்றி வருகிறார்.

லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு வருவதற்கு முன்பு, சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவில் இவர் பணியாற்றி வந்தார். முக்கியமான பல வழக்குகளில் உயர் அதிகாரிகளுடன் இணைந்து அவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இவரது தந்தை கோபாலன், ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். இவரும் குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு இந்த தகவலை தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்