சென்னை-கோவையில் தொழில் நுட்ப பூங்கா: அமைச்சர் பூங்கோதை

திங்கள், 1 ஜூன் 2009 (16:21 IST)
எல்காட் நிறுவனம் சார்பில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் தொழிற்நுட்ப‌ப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசியதாவது:

எல்காட் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய நகரங்களில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா நிறுவப்படுகிறது.

சென்னை, கோவையில் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா செயல்படும்.

கிருஷ்ணகிரியில் கிராம அழைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 7 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதே போன்று பிற மாவட்டங்களிலும் விரைவில் தொடங்கப்படும்.

தலைமை செயலகத்தில் உள்ள வணிக வரித்துறையில் முழுமையாக மின் ஆளுமை கொண்டு வரப்பட்டுள்ளது. பதிவுத்துறை, வேளாண்மை, சுகாதாரத்துறைகளில் அடுத்த மாதம் மின் ஆளுமை கொண்டு வரப்படும். படிப்படியாக அனைத்து துறைகளும் விரைவில் மின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்படும்.

எல்காட் மூலம் மாணவர்களுக்கு குறைந்த விலையில் மடி கணிணி வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் மடி கணிணி வழங்க திட்டமிட்டு, இதுவரை 3 ஆயிரம் பேர் மட்டுமே வாங்கியுள்ளனர். ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள இந்த மடி கணிணி ரூ.31,717க்கு விற்கப்படுகிறது.

உலக பொருளாதார வீழ்ச்சியால் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பு குறையவில்லை. என்ஜினீயரிங் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். போலி ரேசன் கார்டுகளை கண்டுபிடிப்பதற்காக புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்