சென்னையில் 7,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

வெள்ளி, 3 ஜூலை 2009 (19:31 IST)
கார்பைடு கற்களை உபயோகித்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் கிலோ அளவிற்கு மாம்பழங்கள், பப்பாளி பழங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுவதால், அவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதிரடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்ததாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ராயபுரம், ராயப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 5 ஆயிரம் கிலோ மாம்பழங்களும், 2 ஆயிரம் கிலோ பப்பாளி பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சுமார் 300 கிலோ கார்பைடு கற்களையும் பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ள செய்திக்குறிப்பு, இந்த வகையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவதால், அல்சர், தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்