சென்னையில் ஐநா அலுவலகம் முற்றுகை; 500 பேர் கைது!

செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (21:12 IST)
FILE
தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் ஐநா அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தில் வைகோ, விடுதலை இராஜேந்திரன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 39 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகளாக ஐநா அமைப்பைச் சேர்ந்த பான்கி மூன், விஜய்நம்பியார், ஜான் ஹோம்ஸ் ஆகியோரையும் சேர்க்க கோரி சென்னையில் ஐநா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்க அமைப்பாளர் திருமுருகன் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று அடையாறில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த மே 17 இயக்கத்தினருடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்த ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை கீழே தள்ளி விட்டு சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் முன்னேறி சென்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, விடுதலை ராஜேந்திரன், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வேல்முருகன் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராஜபக்சே படத்துக்கு செருப்பு மாலை போட்டு எடுத்து வந்தனர். அவரது உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர். இந்த போராட்டம் காரணமாக அடையாறில் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்