சி.எஸ்.ஐ. பிஷப் தேவசகாயத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்
செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (09:20 IST)
அமெரிக்காவில் இருந்து மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ததில், குறைவாக மதிப்பீட்டு வரி செலுத்தி முறைகேடு செய்ததற்காக தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பிஷப் தேவசகாயத்துக்கு சுங்கத் துறை ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பேராயராக இருப்பவர் வி.தேவசகாயம். சென்னை பேராயத்துக்குச் சொந்தமான சென்னை கல்யாணி மருத்துவமனை, ஆந்திரா மாநிலம் நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.
ஏழை மக்களின் நலனுக்காக மருத்துவமனைகளுக்கு அயல்நாட்டு தொண்டு நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை கொடுப்பது வழக்கம். இந்தநிலையில் 'வொர்ல்ட் மெடிக்கல் ரிலீப்' என்ற அமெரிக்கா நிறுவனம், நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பல மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் மார்க்கமாக அனுப்பியது. இவற்றில் எக்ஸ்ரே, டயலசிஸ், இ.சி.ஜி. இயந்திரங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், கட்டில்கள் மற்றும் மருந்துகள் உட்பட பல பொருட்கள் அடக்கம்.
இந்த நிலையில், மருந்துப் பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடந்து இருப்பதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையை டி.ஆர்.ஐ. மேற்கொண்டது. பின்னர் இந்த விவகாரத்தை 2003ஆம் ஆண்டு சென்னை சுங்கத் துறை ஆணையரிடம் விசாரணைக்காக டி.ஆர்.ஐ. அனுப்பி வைத்தது. புகாரை பெற்றுக் கொண்ட அப்போதைய சுங்கத் துறை ஆணையர், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை மிகுந்த குறைவாக மதிப்பிட்டு காட்டியதும், உண்மையான மதிப்பை மறைத்தும், வரியை குறைத்தும் கட்டியது தெரியவந்தது. எனவே இதுகுறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிடப்பட்டது.
அதன்படி நகரி சி.எஸ்.ஐ. மருத்துவமனை நிர்வாகம், பிஷப் தேவசகாயம், சென்னை சி.எஸ்.ஐ. கல்யாணி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜகுமாரி சுந்தர், ஏஷியன் ஷிப்பிங் ஏஜென்சீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சென்னை தனியார் மருந்து கம்பெனியைச் சேர்ந்த தாமோதரன் ஆகியோருக்கு விளக்கம் அளிக்க தாக்கீது அனுப்பப்பட்டது.
இந்த தாக்கீது தொடர்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போதிருந்த சென்னை சுங்கத்துறை ஆணையர் ராஜன் அவர்களை விசாரித்தார். அனைத்து விவகாரங்களையும் பதிவு செய்து, கடந்த 31.3.10 அன்று சி.ராஜன் உத்தரவு பிறப்பித்தார்.
அதில், அமெரிக்காவில் இருந்து ரூ.2.22 கோடி மதிப்புள்ள மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 56 ஆயிரத்து 142 வரியாக செலுத்தப்பட வேண்டும். ஆனால் அவற்றை குறைத்து மதிப்பிட்டு குறைவாக வரி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. அதிக அளவு மதிப்புள்ள இதுபோன்ற பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால், வரிச் சலுகைக்காக அரசை ஏற்றுமதியாளர்கள் அணுகலாம்.
சுங்கத்துறை சட்டத்தின்படி முறைகேடாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். ஆனால் அவர் நீண்ட நாட்களுக்கு முன்பே கொண்டு வரப்பட்டுவிட்டன. நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மருத்துவமனை நிர்வாகம், ரூ.1.34 கோடி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும். டாக்டர் ராஜகுமாரி சுந்தர், பிஷப் தேவசகாயம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஏ.பி.பிரேம்குமாருக்கு ஒரு லட்சம் ரூபாயும், தாமோதரனுக்கு ரூ.25 ஆயிரமும், சூப்பிரன்டென்டன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்வதற்கு இதுபோன்ற மோசமான வழியை தேர்வு செய்தது வருத்தமளிக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள், ஏசுவின் வழிகாட்டுதலுக்கு புறம்பாக நடந்துள்ளனர். வரி செலுத்துங்கள் என்றுதான் ஏசு கூறி இருக்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.