சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் கவலைக்கிடம்!

சனி, 12 ஜனவரி 2008 (20:22 IST)
கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை அத்துமீறி சுட்டதில் ஒரு மீனவர் குண்டடிபட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

ராமேஸ்வரம் தீவில் இருந்து இன்று காலை 601 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத் தீவு அருகே மதியம் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர் எவ்வித காரணமுமின்றி சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் சேகர் (வயது 40) என்ற மீனவருக்கு தோளில் குண்டு பாய்ந்ததில் அவர் படகில் சுருண்டு விழுந்துள்ளார். படகிலிருந்த மற்ற மீனவர்களான சகாயம், செல்வம், கணேசன் ஆகியோர் உயிர் தப்பினர்.

உடனடியாக கரைக்குத் திரும்பிய அவர்கள் காவல் துறைக்கு புகார் தெரிவித்தனர். குண்டடிப்பட்ட சேகர் முதலில் ராமநாதபுரம் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு மதுரை கொண்டு செல்லப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குண்டடிபட்டதில் அவருக்கு அதிக ரத்தம் வெளியேறிவிட்டதால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதென செய்திகள் கூறுகின்றன.

சிறிலங்க கடற்படையின் அடாத செயல் மீனவர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய - சிறிலங்க கடற்பகுதியில் இந்திய கடலோர காவற்படையின் 3 கப்பல்களும், இந்திய கடற்படையின் கப்பல் ஒன்றும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாக கடலோர காவற்படையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறிலங்க கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்