சிங்கள கடற்படையைக் கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் 16ஆம் தேதி போராட்டம்

வியாழன், 12 நவம்பர் 2009 (17:47 IST)
தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் மீது அத்துமீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் சிங்கள கடற்படையைக் கண்டித்து வரும் 16ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மீனவர் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் சிங்காரவேலர் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவர் கவிஞர் ஆனந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “இனவெறி பிடித்த சிங்கள ராணுவம் தமிழகம், புதுவை மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நடுக்கடலில் தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துகிறது. இதுவரை ஏராளமான இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி விட்டனர்.

மீனவர்களை பாதுகாக்க வேண்டி மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிலங்க அரசுக்கு இதுதொடர்பாக ஒரு எச்சரிக்கை கூட கொடுக்கவில்லை.

சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும், தமிழக, புதுச்சேரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றக் கோரியும் வரும் 16ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம” என கவிஞர் ஆனந்த் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்