கோவையில் பார்வையற்ற நீதிபதி நியமனம்!

திங்கள், 1 ஜூன் 2009 (16:34 IST)
கோவை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில், முதன் முதலாக பார்வையற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள திமிரி கிராமத்தை சேர்ந்தவர் டி.டி.சக்கரவர்த்தி (வயது 41). பார்வையற்ற இவர் வழக்கறிஞர் பட்டப்படிப்பு முடித்து, மாவட்ட நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.

பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வந்த இவர் தமிழக அரசு தேர்வு எழுதி மாவட்ட நீதிபதி பயிற்சிக்கு தேர்வு பெற்றார். கடந்த ஆண்டு நடந்த நீதிபதிகளுகான தேர்வுக்கான தேர்வில் இவர் 13வது இடத்தை பிடித்தார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு மாவட்ட ஜூடிசியல் அகாடமியில் கடந்த மார்ச் 11ம் தேதி பயிற்சியில் சேர்ந்தார். இருமாதங்கள் பயிற்சி பெற்ற இவர், வால்பாறை நீதிமன்றத்திலும் பயிற்சி நீதிபதியாக பணியாற்றினார்.

இந்நிலையில் கோவை மாவட்ட 3வது கூடுதல் முன்சீப் நீதிமன்ற நீதிபதியாக சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். பார்வையற்ற ஒருவர் நீதிபதியாக பதவியேற்பது இதுவே முதல் முறை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்