கோடீஸ்வர திமுக வேட்பாளர்கள் சீட் வாங்கிவிட்டனர்; அழகிரி பரபரப்பு பேட்டி

செவ்வாய், 11 மார்ச் 2014 (17:35 IST)
பணம் கொடுத்தவர்களுக்கே திமுகவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
FILE

திமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களை அடிக்கடி சந்தித்து பேசி ஆதரவு திரட்டி வருகிறார். சென்னையில் தங்கி இருக்கும் அவர் 2 நாட்களுக்கு முன்னர் திருவள்ளூரில் திமுக பிரமுகர் ஒருவரின் இல்லத்துக்கு சென்றார்.

நேற்று தாம்பரம் அருகே உள்ள பம்மலில் உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பியை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவினர் சிலர் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அழகிரி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி அழகிரி கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:- திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் ஸ்டாலினின் ஆதரவாளர்கள். வேட்பாளர்கள் தேர்வில் முறையான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு எல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளனர். வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் நிலவும் அதிருப்தி குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை. அதனை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மதுரையில் எனக்கு சீட் வழங்காதது பற்றி கேட்கிறீர்கள். நான்தான் சீட்டே கேட்கவில்லையே, சஸ்பெண்டு செய்தவர்களிடம் போய் எப்படி சீட் கேட்க முடியும்.

திமுக வேட்பாளர் பட்டியலில் டி.கே.எஸ்.இளங்கோவனை தவிர மற்றவர்கள் யாரும் கருணாநிதியால் முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் இல்லை. ஒருவரை கூட அவரால் வேட்பாளராக அறிவிக்க முடியாத நிலையே உள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும். பல தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் 3-வது இடத்துக்கு தள்ளப்படுவார்கள் என்று அழகிரி கூறினார்.

அழகிரி ஆதரவாளர்களான எம்.பி.க்கள் நெப்போலியன், ஜே.கே.ரித்தீஸ் ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு- வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்