கேப்டன் மூலம் தமிழ்நாடு நல்லரசாகும் - பிரேமலதா பேச்சு

சனி, 19 ஏப்ரல் 2014 (11:20 IST)
கன்னியாகுமரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
திறந்த வேனில் அவர் செய்த பிரச்சாரத்தில் பேசியதாவது:
 
குஜராத்தை விட தமிழகம் முதன்மையான மாநிலம் என ஜெயலலிதா சொல்கிறார். இதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல முடியுமா? குஜராத்தில் மின்வெட்டு என்பதே கிடையாது. நர்மதா ஆற்றில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் ராட்சத பைப்புகள் அமைத்து குடிநீர், தொழிற்சாலை, விவசாயம் என அனைத்திற்கு தண்ணீர் தட்டுப் பாடின்றி கிடைக்கிறது.
 
குஜராத்தில் முதன்மையான தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. லஞ்ச, ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. நதிநீர் இணைப்பைப் பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அறிவிப்பு அரசியலை அவர் மீண்டும் தொடங்கி விட்டார்.
 
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் கேப்டன் (விஜயகாந்த்) அலை வீசுகிறது. 2 பேரும் சேர்ந்து நல்ல ஆட்சியைத் தரப்போகிறார்கள். மோடி மூலம் இந்தியா வல்லரசு ஆகும். கேப்டன் மூலம் தமிழ்நாடு நல்லரசு ஆகும்.
 
தமிழ்நாட்டில் அமைதி, வளம், வளர்ச்சியை எங்காவது பார்த்து இருக்கிறீர்களா? சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டதில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் வளமாக இருக்கிறார்கள். தமிழகம் டாஸ்மாக் வருமானத்தில் தான் வளர்ச்சியை அடைந்துள்ளது.
 
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டுமே பழிவாங்கும் அரசியல் நடத்தி மக்களை பழி வாங்குகிறார்கள். எனவே பா.ஜ. கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்.
 
இவ்வாறு பேசினார் பிரேமலதா

வெப்துனியாவைப் படிக்கவும்