கூடங்குள‌ம் அணுஉலை‌க்கு ஆதரவாக சர‌த்குமா‌ர் பேர‌ணி

புதன், 3 அக்டோபர் 2012 (11:38 IST)
கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலை‌யத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க வலியுறுத்தி தமிழகத்தில் விழிப்புணர்ச்சி வாகன பேரணி நட‌த்த‌ப் போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதன் ஈடுபடும் அனைத்து தொழில்களிலும், பஸ், ரெயில், விமான பயணங்களிலும், ஆபத்து என்று ஒன்று இல்லாமல் இல்லை. விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் விமானம் ஆபத்தில் சிக்கினால் எப்படி தப்பிப்பது என்று தான் முதலில் பாடம் நடத்துகிறார்கள்.

தீவிரவாதிகளாலும் எதிரி நாட்டுப்படையினராலும் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து உருவாகலாம் என்று அறிந்துதான், நம் நாட்டின் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் பணியில் இருக்கிறார்கள்.

மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தி பணிகளை விரைவில் தொடங்கிட வலியுறுத்தி தமிழகத்தில் 'விழிப்புணர்ச்சி' வாகன பேரணி ஒன்றை விரைவில் தொடங்கிட இருக்கிறோம். அதற்கு நானே தலைமை ஏற்க உள்ளேன்.

பேரணி தொடங்கி முடியும் இடம், எத்தனை நாட்கள் என்பதை விரைவில் அறிவிக்கின்றோம். மக்கள் விழிப்புணர்வு பெறவும், ஏன் வேண்டும் கூடங்குளம் என்பதை விளக்கியும், 5 லட்சம் புத்தகங்கள் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்க இருக்கிறோம் எ‌ன்று சரத்குமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்