கூடங்குளம் போராட்டம்: வைகோ உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது தமிழக போலீஸ் வழக்கு

வியாழன், 17 நவம்பர் 2011 (18:24 IST)
கூடங்குளம் அணுத்திட்ட எதிர்ப்பாளர்கள் மீது தமிழக போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. வைகோ, ஒரு பாதிரியார், போராட்டக்குழு தலைவர் உதயகுமார் சமூக சேவகி மேதா பட்கர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

சட்டவிரோதாமக ஒரு இடத்தில் கூடுதல் மற்றும் வழிபாட்டு இடத்தை அரசுக்கு எதிரான பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துதல், வதந்திகளைப் பரப்புதல், போராட்டக்காரர்களைத் தூண்டிவிடுதல், அரசு ஊழியர்களை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் நியூசன்ஸ் உள்ளிட்ட 76 வழக்குகளை இவர்கள் மீது தமிழக காவல்துறை பதிவு செய்துள்ளது.

பிஷப் யுவான் ஆம்ப்ராய்ஸ் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மற்ற பாதிரிமார்கள் ஆகியோரும் தங்களது ஆதரவை போராட்டக்காரர்களுக்குத் தெரிவித்திருப்பதால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தவிர, தமிழ்நாடு அரசு இதற்காக நியமித்த 6 நபர் குழுவில் இருந்த புஷ்பராயன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி போராட்டக்காரர்களுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விசாரிக்கவுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ரோமன் கத்தோலிக்க திருக்கோயில் பாதிரியார்கள் கூடங்குளத் திட்டத்தை எதிர்த்து வருவதாகவும் இதனையடுத்து வள்ளியூரிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளது.

அதாவது பாதிரியார்கள் ஆர்பாட்டக்காரர்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று காவல்துறை குற்றம்சாற்றியுள்ளது.

மதிமுக தலைவர் வைகோ மட்டுமல்லாது, பாமக தலைவர் ஜி.கே. மணி, தொல். திருமாவளவன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ராயப்பன் ஆகியோர் தவிர மேதா பட்கர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு வரும் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை காவல்துறையும், வருமானவரித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்