கூடங்குளம்: போராட்டத்தை ஒடுக்க தயாராகிறது காவல்துறை?

வெள்ளி, 2 மார்ச் 2012 (13:54 IST)
கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில், அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு தயாராகி விட்டதாகவே தெரிகிறது.

தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் ,தென்மண்டல ஐ.ஜி.ராஜேஷ் தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயேந்திர பிதரி, பிரவேஷ்குமார், ராஜேந்திரன், கன்னியாகுமரி டி.எஸ்.பி.பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கூடங்குளம் சென்றுள்ளனர்.

அங்கு பாதுகப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்கள். இன்று காலை முதலே கூடங்குளம் அணு மின் நிலையம் முன்பு ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அதிரடிப் படை வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனைகளும் நடந்து வருகிறது.

இதனால் கூடங்குளம் பிரச்னையில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை மேற்கொள்ளவும், போராட்டத்தை ஒடுக்கவும் தமிழக அரசு தயாராகி விட்டதாகவே தெரிகிறது.

இதனால் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மத்தியிலும் பரபரப்பும்,பீதியும் நிலவுவதால் கூடங்குளத்தில் பதற்றம் காணப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்