குவாட்ரோச்சி மீது காட்டிய அக்கறையை இலங்கை தமிழர் மீது காட்டவில்லை: எச்.ராஜா
வியாழன், 30 ஏப்ரல் 2009 (13:56 IST)
போபர்ஸ் ஊழல் வழக்கிலிருந்து இத்தாலிய தொழிலதிபர் குவாட்ரோச்சியை விடுவிப்பதில் காட்டிய அக்கறையை, மத்திய அரசு இலங்கை தமிழர்கள் மீது காட்டவில்லை என்று பாரதிய ஜனதா குற்றம் சாற்றியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் கூட்டணி இல்லாமல் முதன் முறையாக வெற்றிப்பெற்று பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
இந்தியாவில் 72 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் விவசாயம் மற்றும் விவசாய தொழில் சம்பந்தப்பட்டவர்கள். இந்த விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற, பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.
எங்கள் தேர்தல் அறிக்கையில், ஐ.சி.டி (ICT - Information Communication Technology) என்னும் விவசாயம் தொடர்பான விற்பனைத் தகவல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளோம். இந்த தேர்தல் அறிக்கையால் கவரப்பட்ட சிவகங்கையை சேர்ந்த திருச்செல்வன் என்ற தகவல் தொழிற்நுட்ப பொறியாளர் எங்களை தொடர்புக்கொண்டு பேசி, தற்போது பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்த திட்டம் குறித்து, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து சுமார் 5 ஆண்டுகள் 'புராஜெக்ட் ஒர்க்' செய்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிரூபித்துள்ளார் திருச்செல்வம். அதோடு, ஆந்திர மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி.யான ஒய்.எஸ். விவேகானந்தா ரெட்டி மூலம், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையும் சந்தித்து, இந்த திட்டம் பற்றி விளக்கியுள்ளார். சிவகங்கையை சேர்ந்த ப.சிதம்பரத்தை, அதே ஊரைச் சேர்ந்த திருச்செல்வம் சந்தித்து பேசியபோதிலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ப.சிதம்பரம் எந்த முயற்சியும் செய்யவில்லை. சிதம்பரத்துக்கு ஏழை விவசாயிகள் மீது அக்கறை கிடையாது. பணக்காரர்கள் மீது தான் அக்கறை உண்டு. இந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும். இந்த திட்டத்தையும் பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றும்.
இலங்கையில் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. எனினும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி மாநிலம், சுதந்திரம், அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பு போன்றவை வழங்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். குற்றவாளி தப்பினாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில், பிரபாகரன் தப்பினால் கூட பரவாயில்லை; அதற்காக அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
இலங்கையில் தமிழ் இனத்தையே அழிக்கும் நோக்கில் தான், ராஜபக்சே அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உதவி செய்து வருகிறது.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கோரி உண்ணாவிரதம் இருந்து, மக்களை ஏமாற்ற நினைத்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால் இறுதியில் அவரே ஏமாந்துபோனார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. அப்படி ஒரு எண்ணமும் தனக்கு இல்லை என்று ராஜபக்சே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இலங்கை பிரச்சனையில் சர்வதேச சமூகம் தலையிட்டு, போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, போர்பர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்டவரும், இத்தாலிய தொழிலதிபருமான குவாட்ரோச்சியை வழக்கில் இருந்து விடுவிப்பதில் காட்டிய அக்கறையை, இலங்கைத் தமிழர்கள் மீது காட்டவில்லை.
சென்னையில் நேற்று நடந்த ரயில் விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த கோர விபத்துக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் பல்வேறு மட்ட அளவில் உள்ள குறைபாடுகளே காரணம். இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 இலக்க இடங்களை தொடப்போவதில்லை. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.