குண்டு வைக்கவில்லை, உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் - ஜாகீர் உசேன்

Ilavarasan

புதன், 7 மே 2014 (12:25 IST)
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை, உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று  ஜாகீர்உசேன் கூறியுள்ளார்.
 
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளியான ஜாகீர் உசேனிடம் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக ஜாகீர் உசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை ஜாகீர்உசேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள ஜாகீர்உசேன், உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தான் என்னை மூளைச் சலவை செய்து இதற்கு சம்மதிக்க வைத்தனர் என்றும், பண ஆசையில் அவர்களின் வலையில் நான் விழுந்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.
 
தூதரக அதிகாரிகளான அமீர் சுபேர்சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகிய 2 பேரும் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்றும் ஜாகீர்உசேன் கூறியுள்ளார். இவர்களின் கட்டளைப்படிதான் கடந்த 6 மாதங்களாக ஜாகீர் உசேன் சென்னைக்கு வந்து சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளையும் கியூபிரிவு காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
 
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் எப்போது? எப்படி விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இது 3 நாடுகள் (இந்தியா– பாகிஸ்தான்– இலங்கை) சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் தனியாக நாங்கள் நேரடியாக சென்று விசாரிக்க முடியாது. தூதரக அதிகாரிகள் துணையுடன் தான் அவர்களை அணுக முடியும். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இதற்கிடையே ஜாகீர் உசேனிடம் ஆந்திர காவல்துறையினரும் விசாரணை நடத்தியுள்ளனர்.
 
விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல்படை தளத்தை தகர்க்க திட்டமிட்டது தொடர்பாக அவர்கள் ஜாகீர் உசேனிடம் தகவல்களை திரட்டியதாக கூறப்படுகிறது. ஜாகீர் உசேனின் 3 நாள் காவல் நாளையுடன் (8 ஆம் தேதி)முடிகிறது. இதனால் நாளை மதியம் அல்லது மாலை எழும்பூர் 13 ஆவது நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்