குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

வியாழன், 21 மார்ச் 2013 (15:37 IST)
FILE
ஈரோடு அருகே குடிநீர் கேட்டு காலிகுடத்துடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ளது அய்யன்சாலை. இது உத்தண்டியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமமாகும். இங்கு குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது பஞ்சாயத்து நிர்வாகம் அய்யன்சாலைக்கு தண்ணீர் ச‌ரிவர வழங்குவதில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

பஞ்சாயத்து நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து அய்யன்சாலைக்கு குடிநீர் வழங்ககோ‌ரி நேற்று காலை ஒன்பது மணிக்கு இப்பகுதி பெண்கள் திடீரென காலிகுடத்துடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர், தொட்டம்பாளையம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டது.

தகவல் தெ‌ரிந்ததும் தாசில்தார் கண்ணப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சௌந்திரராஜன் உள்ளிட்ட அதிகா‌ரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அய்யன்சாலை கிராமத்திற்கு குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகா‌ரிகள் உறுதியளித்தனர். இதனால் 9.30 மணிக்கு சாலைமறியல் கைவிடப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்