காவிரியில் மூழ்கி 4 பேர் பலி! மணல் கொள்ளை காரணமா?

திங்கள், 29 ஏப்ரல் 2013 (12:19 IST)
திருச்சியை அடுத்த நங்கவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காவிரியில் நீர் எடுக்க வந்தபோது மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உமாவதி (35), இவரது மகள் தீபா (13), சிறுவன் ஜீவானந்தம்(10) மற்றும் பிரவீணா (18) ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

ஞாயிறன்று சவரிமேடு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா சடங்குகளுக்காக அருகில் உள்ள காவிரியில் நீர் எடுக்க வந்துள்ளனர்.

கரை அருகே தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் திடீரென இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கினர். மணற்கொள்ளையால் கரையை ஒட்டிய பகுதிகளில் நீருக்கடியில் பெரிய பெரிய ஆள் விழுங்கிக் குழிகள் தோன்றியுள்ளன. இதில்தான் இந்தக் குடும்பம் மூழ்கி பலியானது.

இத்தனைக்கும் ஒரு 30 பேர் அங்கு நீராடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சிக் குதூகலத்தில் அருகில் போய்க்கொண்டிருக்கும் உயிரைப் பற்றி தெரியாமல் போனது.

பிறகு ஒரு சிலர் இவர்களைக் காப்பற்ற முயன்றனர். நீரிலிருந்து நால்வரையும் வெளியே எடுத்தபோது 4 பேரும் நினைவிழந்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கிராமத்தின் பிரமைரை ஹெல்த் செண்டரில் மருத்துவர் இல்லை. இதனால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர்களை எடுத்துச் செல்ல நேரிட்டது. ஆனால் அங்கு செல்லும்போது உடலில் உயிர் இல்லை.

இதனால் கடும் ஆத்திரமடைந்த பெருகமணி, நங்கவரம் மக்கள் மணல்கொள்ளையால்தான் இது நடைபெற்றுள்ளது எனவே மணற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் நீதி கேட்டுள்ளனர்.

சித்திரைத் திருவிழா நேரத்தில் இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்