காய்கறி கடையில் கஞ்சா விற்பனை; பொள்ளாச்சியில் பரபரப்பு

புதன், 3 ஏப்ரல் 2013 (11:55 IST)
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் காய்கறிக்குள் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார். கொடைகானலிலிருந்து கஞ்சா கொண்டு வந்ததாக தகவல். மேலும் இருவருக்கு காவல்துறை வலைவீச்சு.

பொள்ளாச்சியில் உள்ள நெகமம் பகுதியில் காய்கறி விற்பனை செய்வது போல கஞ்சா விற்ற ராஜம்மாள் என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். கொடைக்கானலில் இருந்து கஞ்சா கொண்டுவரப்பட்டு, மொத்தமாக வாங்கி மூவர் விற்பனை செய்து வருவதாக, நெகமம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

நெகமம் சந்தைப்பேட்டைக்கு காய்கறி விற்பது போல வந்து அமர்ந்த ஒரு பெண்ணை சந்தேகப்பட்டு, அவர் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்ததில், அதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவும், 1 லட்சத்து 29 ஆயிரம் பணமும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரித்த போது, தனது சகோதரன் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து மூவரும் கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இன்று கொடைகானலில் இருந்து கஞ்சா கொண்டு வருவார்கள் என்றும் தெரிவித்தார். மொத்தமாக கஞ்சா வாங்கி சில்லரையாக விற்பனை செய்ததாகவும் தெரிவித்தார்.

பிடிபட்ட ராஜம்மாளை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மற்ற இருவரையும் கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்