காதல் திருமணம் செய்த பெண்ணின் கழுத்தை அறுத்த தாய்மாமன் கைது

ஞாயிறு, 20 ஜனவரி 2013 (11:24 IST)
FILE
''வாழ்ந்தால் காதலனுடன்தான் வாழ்வேன்'' என்று காதல் திருமணம் செய்த இளம்பெண் கூறியதால் ஆத்திரம் அடைந்த தாய்மாமன், அ‌ந்த பெண்ணின் கழுத்தை அறுத்த தாய் மாமனை போலீசார் கைது செய்து‌ள்ளன‌ர்.

ிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்து உள்ள மெதூர் கிராமத்தை சேர்ந்த நடராஜ‌னி‌ன் மகள் நந்தினி (21) செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆயநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரவீன்(25) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

FILE
பிரவீனும், நந்தினியும் ஒரே பஸ்சில் பயணம் செய்ததா‌ல் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 17ஆ‌ம் தேதி காலை நந்தினி கல்லூரிக்கு சென்றார். அங்கிருந்து காதலனுடன் கும்மிடிப்பூண்டிக்கு சென்றார். பின்னர் அங்கு ரயில் நிலையம் அருகே உள்ள முருகன் கோவிலில் நந்தினியின் கழுத்தில் காதலன் பிரவீன் தாலி கட்டியதாக கூறப்படுகிறது. 2 நாட்களாக தலைமறைவாக இருந்த காதல் ஜோடி கட‌ந்த 18ஆ‌ம் தே‌தி பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி சார்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொள்ள சென்றனர்.

இது பொன்னேரி அருகே உள்ள சிங்கிலிமேடு கிராமத்தை சேர்ந்த நந்தினியின் தாய் மாமன் ரவி (42)க்கு தெரிந்து, அவர் அங்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி அங்கிருந்து தப்பியது. இந்த நிலையில் நேற்று மதியம் ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழ‌க்க‌றிஞ‌ர் வேல்முருகனை அவரது அலுவலகத்தில காதல் ஜோடி சந்தித்தது.

இதுகுறித்து அவர், நந்தினி மற்றும் பிரவீனின் பெற்றோர், உறவினர்களை அழைத்து சமரசம் செய்து கொண்டிருந்தார். அப்போது நந்தினி, ''வாழ்ந்தால் பிரவீனுடன்தான் வாழ்வேன்'' என்று திட்டவட்டமாக கூறிவிட்டா‌ர். இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய்மாமன் ரவி, திடீரென பேனா கத்தியால் நந்தினியின் கழுத்தை அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் நந்தினி சாய்ந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக நந்தினியை ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல் சேர்த்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மரு‌த்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து நந்தினியின் தாய்மாமன் ரவியை கைது செய்தார். மரு‌த்துவமனை‌யி‌ல் நந்தினி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் ஊத்துக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்