உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழ்நாட்டிலும் காதலர்கள் பலரும் இந்த நாளை சிறப்பித்து வரும் நேரத்தில், குமரி மாவட்டத்தில் காதலை எதிர்த்து இந்து மகாசபா கட்சியினர் காதலர் தினத்தன்று நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் கடற்கரை சாலை சந்திப்பில் இன்று 2 நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை இந்து மகாசபா கட்சியினர் நடத்தினர். அவர்கள் 2 நாய்களை நாற்காலியில் அமர வைத்து அவற்றிற்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து இந்து மகாசபா தலைவர் சுரேஷ் கூறும் போது, காதலர் தினம் கலாச்சார சீரழிவின் அடையாளம். இது போன்ற தினங்களை கொண்டாடுவதால் டெல்லியில் மாணவி கற்பழிப்பு, காரைக்காலில் மாணவி மீது ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்கத்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
ஒரு அறிவார்ந்த சமூகம் என்பது ஜாதி, மத, இனம், ஏன் தேச எல்லை கடந்த ஒற்றுமையயும், உறவு மேம்பாட்டையும் விரும்பும். மனிதர்கள் ஒன்றுபடுதலை விரும்பாதவர்கள், அதாவது ஜாதியாக, மதமாக, குலமாக பிரிந்து பிரிந்து வேற்றுமை பாராட்ட விரும்புகிறவர்கள் காதலையும், அதன் வினை ஊக்கியான காதலர்தினத்தையும் எதிர்க்கிறார்கள்.