கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

வெள்ளி, 29 நவம்பர் 2013 (09:48 IST)
FILE
மிரட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்று கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபருக்கு கோவை கோர்ட்டில் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கோவை பீளமேடு சேரன் மாநகரை சேர்ந்த ஒரு மாணவி, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவர் 20.10.2010 அன்று மதியம் சக மாணவர் அழைப்பின் பேரில் வ.உ.சி. பூங்காவுக்கு வந்து காத்திருந்தார். வெகு நேரமாகியும் அந்த மாணவர் வரவில்லை.

இதனால் மாணவி தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் செல்போனை இரவல் கேட்டு வாங்கி, தன்னை வரச்சொன்ன மாணவருக்கு போன் செய்தார். அதற்கு அந்த மாணவர் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்று பதில் கூறினார்.

இதைத் தொடர்ந்து மாணவி, தான் பேசிய செல்போனை அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு, அங்கேயே காத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த வாலிபர் மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். தான் குனியமுத்தூரை சேர்ந்த செல்வன் (28) என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இருவரும் ஒருவருக்கொருவர் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்டனர். சக மாணவர் வருவதற்கு நேரம் ஆகலாம் என்று நினைத்து செல்வனுடன் சேர்ந்து சுற்றிப்பார்க்க தொடங்கினார். அப்போது செல்வன், மாணவியிடம் நைசாக பேசி தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்.

படம் முடிந்ததும், நீ என்னோடு வீட்டுக்கு வந்துவிட்டு செல்லலாமே என்று அழைத்தார். அதற்கு மாணவி மறுக்கவே, என் வீட்டுக்கு வராவிட்டால் நீ என்னுடன் இருந்ததை வீட்டில் சொல்வேன் என்று மிரட்டினார். என்னுடன் வரவில்லை என்றால், உனது தாயை கொன்று விடுவேன் என்றும் ஆவேசமாக கூறினார்.

இதனால் மிரண்டுபோன மாணவி, செல்வன் வீட்டுக்கு சென்றார். அங்குள்ள அறையில் மாணவியை பூட்டி செல்வன் கற்பழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி நீண்ட நேரத்துக்கு பிறகு அங்கிருந்து தப்பினார். பின்னர் அவர், நடந்த சம்பவம் குறித்து தனது வீட்டில் கூறி கதறி அழுதார்.

மாணவியின் பெற்றோர் காந்திபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெயிண்டர் சுரேஷ் என்கிற ராசப்பன் என்ற செல்வன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.

நேற்று வழக்கை விசாரித்த மகளிர் கோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியம் தனது தீர்ப்பில், செல்வனின் இந்த செயலானது கொலைக் குற்றத்தைவிட கடுமையானதாகும். ஆகவே மாணவியை கடத்திய குற்றத்துக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவித்தார். கற்பழித்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், இந்த அபராத தொகையை இழப்பீடாக அந்த மாணவிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

அபராத தொகையை செலுத்தாவிட்டால் செல்வனின் அசையும், அசையா சொத்துகளில் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்