கலைஞர் திமுக என்ற பெயரில் மு.க.அழகிரி புதிய கட்சி? - மதுரையில் பரபரப்பு சுவரொட்டிகள்

திங்கள், 17 மார்ச் 2014 (12:50 IST)
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கலைஞர் திமுக என்ற பெயரில் மு.க.அழகிரி புதிய கட்சி உதயம் என்று மதுரையில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
FILE

கடந்த ஜனவரி மாதம், மு.க.அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை மதுரை நகர் முழுவதும் ஒட்டினர். இதைத்தொடர்ந்து சுவரொட்டி ஒட்டிய திமுக-வினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை மாநகர் திமுக கலைக்கப்பட்டு, பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.அழகிரியும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் மு.க.அழகிரி, பிரதமர் மன்மோகன் சிங், பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று மு.க.அழகிரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
FILE

இதற்கிடையே மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், மீண்டும் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த சுவரொட்டியில் "கலைஞர் திமுக-வின் பொது செயலாளரே", "கட்சியும், கொடியும் ரெடி, பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மேலும் அந்த சுவரொட்டியில் மு.க.அழகிரி நடந்து வருவது போன்ற முழு உருவபடமும், அருகில் துரை தயாநிதியும் மற்றும் திமுக கொடியின் மத்தியில் கலைஞரின் படமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் மற்றும் சில நிர்வாகிகள் படமும் ஜீவாநகர் 91-வது வார்டு திமுக என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்