கர்நாடகா சம்பவம் எதிரொலி: தமிழக சட்டப்பேரவையில் செல்போனுக்குத் தடை

வியாழன், 9 பிப்ரவரி 2012 (10:52 IST)
கர்நாடக சட்டப்பேரவை சம்பவம் எதிரொலியாக, தமிழக சட்டப்பேரவையில் செல்போனுக்குத் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 3 அமைச்சர்கள் ஆபாசப் படம் பார்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக 3 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழக சட்டப்பேரவையில் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவைக்குள் செல்போன் கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை கூடிய அவைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்படி அவசரமாகப் பேச வேண்டுமானால், பேரவை லாபியில் பொதுத்தொலைபேசிகள் வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தொடர் நடைபெறும்போது செல்போன்கள் ஒலிப்பதால் அவை நடவடிக்கைகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாக கூறி, ஏற்கனவே அவையில் செல்போன் கொண்டுவர தடைசெய்யப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் சில புதிய உறுப்பினர்கள் செல்போன்களை எடுத்துவருவதாக எழுந்த புகாரின் பேரிலும், கர்நாடக சம்பவம் எதிரொலியாகவும் இப்பொழுது முற்றிலுமாக செல்போனுக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்