கரும்பு விலை டன்னுக்கு ரூ.1550 ஆக உயர்வு: கருணாநிதி

வியாழன், 24 செப்டம்பர் 2009 (15:35 IST)
TN.Gov.
TNG
9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு, டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.1550 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொட‌‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி‌க் குறிப்பில், 2009-2010ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு 9.5 சத பிழி திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு சட்டப்பூர்வ குறைந்த பட்ச விலையாக ரூ. 1,077-60 என அறிவித்துள்ளது.

மத்திய அரசின் விலை கட்டுப்படியாகவில்லை என்ற தமிழகக் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை முதலமைச்சர் கருணாநிதி கனிவுடன் பரிசீலித்து, மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ. 359-80 உயர்த்தி 9.5 சத பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ. 1,437.40 எனவும், வாகன வாடகையாக டன் ஒன் றுக்கு ரூ. 90ம், சராசரி பிழிதிறன் அடிப்படையில் ஊக்கத் தொகையாக ரூ. 22-60ம் ஆக மொத்தம் ஒரு டன் கரும்புக்கு ரூ. 1,550 என உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.

சென்ற ஆண்டு உறுதி செய்த விலை 1,220 என்பதும், அதை விட இந்த ஆண்டு 330 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்பதும், ஒரே ஆண்டில் இதுவரை இந்த அளவிற்கு உயர்த்தப்பட்டது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது போலவே அண்டை மாநிலங்களான ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, மராட்டியத்திலோ மத்திய அரசு நிர்ணயம் செய்கின்ற விலையை விட அதிகமாக உயர்த்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்