கருணாநிதியின் சட்டபேரவை பொன்விழா : ஆளுநர் பாராட்டு!

முதலமைச்சர் கருணாநிதியின் 50 ஆண்டுகள் சட்டப்பேரவை பணியை பாராட்டும் வகையில் தமிழக சட்டபேரவையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு பாராட்டிப் பேசினார்.

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் 2006 ஆம் ஆண்டு போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் பணியாற்றி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி தி.மு.க. சார்பில் சட்டப் பேரவையில் பொன் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி முதலமைச்சர் கருணாநிதி பொன் விழா இன்றும் நாளையும் சட்டப்பேரவையில் கொண்டாப்படுகிறது. இதற்காக கோட்டை நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்லும் வாசல்களில் அலங்கார வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழக சட்டபேரவையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா முன்னிலை வகித்து முதலமைச்சரை பாராட்டிப் பேசினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் பாராட்டு உரை நிகழ்த்தினர்.

இலக்கியம், கலை, திரையுலகத்திற்கு புத்துயிர் அளித்தவர் முதலமைச்சர் என்றும், இதே சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளித்தவர் என்றும் சுர்ஜித் சிங் பர்னாலா கூறினார்.

பின்னர் ஏற்புரை அளித்த முதலமைச்சர் கருணாநிதி, வாழ்த்திப் பேசிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்