கனிமொழி தொடங்கி வைத்தார்: வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த ஊனமுற்றோர்

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (16:28 IST)
தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பு அறக்கட்டளையும், நீட் டிரஸ்டும் இணைந்து சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்றோர்) வேலைவாய்ப்பு முகாமை இன்று நடத்தின.

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இந்த முகாமை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்துப் பேசினார்.
webdunia photo
WD

ஊனமுற்றோர் அறக்கட்டளை கூட்டமைப்பின் தலைவர் க. சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலாளர் பா. சிம்மச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். நீட் டிரஸ்ட் இயக்குனர் ஜாய்சுலா எஸ். சேகர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதால், ஊனமுற்றோர் தங்கள் வாழ்வில் சிறந்த இடத்தைப் பிடிக்க வழிவகுக்கும் என்று கூறினார்.

இந்த முகாமை ஏற்பாடு செய்த அறக்கட்டளைக்கும், நீட் டிரஸ்டுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறிய கனிமொழி, ஊனமுற்றோருக்கு அரசு வழங்கும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை முழு அளவில் அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் திருமலை ஜெயின் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள், சரிதா மகேந்திர குமார் ஜெயின், இணைய தளத்தை உருவாக்கிய முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பு அறக்கட்டளை பொருளாளர் டி.எம்.என். தீபக் நன்றி கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம் குறித்து தீபக் கூறுகையில், இன்றைய முகாமில் சுமார் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வந்து பதிவு செய்து கொண்டுள்ளதாகவும், 800 பேர் வரை இன்றைய முகாமில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பதிவு செய்துள்ளவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப இனிவரும் காலங்களில் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நீட் டிரஸ்டுடன் இணைந்து நடத்த தங்கள் ஊனமுற்றோர் கூட்டமைப்பு அறக்கட்டளை முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

ஸினர் ஜெர்னி நிறுவனத்தின் சட்ட ஆலோசகரும், வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான டாக்டர் சீதாலட்சுமி கூறுகையில், உடல் ஊனமுற்றோருக்காக பிரத்யேகமாக இந்த முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவைப்படும் நிறுவனங்களுக்கு ஊனமுற்றோரின் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வேலை வழங்க முயற்சி மேற்கோள்ளப்படும் என்று தெரிவித்தார்.

முற்றிலும் உடல் ஊனமுற்றோர் இணைந்து, மா என்ற தலைப்பில் புதிய திரைப்படம் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக சிம்மச் சந்திரன் தெரிவித்தார். அந்த திரைப்படத்தை கின்னஸ் சாதனைக்காக அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு முகாமுடன் ஊனமுற்றோர் அறக்கட்டளையின் புதிய இணைய தள தொடக்கமும், கலைவிழி எனும் அமைப்பு தொடக்கவிழாவும் நடைபெற்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்