கட்டாய வசூல் செய்தால் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் ரத்து : த‌மிழக அரசு எச்சரிக்கை

வியாழன், 18 ஜூன் 2009 (17:14 IST)
பள்ளி மாணவர்களிடம் பராமரிப்பு கட்டணம் என்பது உள்பட பல பெயர்களில் கட்டாய வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்‌பி‌ல், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் கோபாலபுரம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு விதிகளுக்கு முரணாக பராமரிப்பு கட்டணம், குறிப்பேடு விற்பனை மற்றும் சில்லறை செலவினத்துக்காக மாணவர்களிடையே கட்டாய வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்ற கட்டாய வசூல் இனி மேற்கொள்ளக்கூடாது என்று நிர்வாகத்தை கண்டித்ததுடன், வசூலித்த பணத்தை மாணவர்களிடம் திருப்பித் தரவேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் பள்ளி நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கட்டாய வசூலில் ஈடுபடும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்