ஓட்டுக்காக பணம் கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மனு

சனி, 29 மார்ச் 2014 (10:31 IST)
ஓட்டுக்காக பணம் கொடுத்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக வக்கீல் பரந்தாமன் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் மனு கொடுத்துள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் திமுக தலைமைக் கழக வக்கீல் பரந்தாமன் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
 
கோயம்புத்தூர் அதிமுக வேட்பாளருக்காக கோவை மேயர் வேலுச்சாமி பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்கள் வீட்டுமனை பத்திரம் கேட்டு முற்றுகையிட்டதைத்தொடர்ந்து வீட்டு வசதி வாரியம் உத்தரவு பிறப்பித்து ஈரோடு, ஓசூர், மதுரை உட்பட பல இடங்களில் பணியாற்றிய ஊழியர்களை கோவை வீட்டுவசதி வாரியத்துக்கு அனுப்பி, ஏப்ரல் 30-ந் தேதிவரை பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றமாகும். வாக்காளர்களை கவருவதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே வீட்டுவசதி வாரியம், தனது ஊழியர்களை ஓரிடத்தில் இருந்து கோவை உட்பட மற்ற இடத்துக்கு பணியமர்த்துவதை தடை செய்ய வேண்டும். ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்குள்ள வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்த சம்பவம், டி.வி. ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.
 
மூக்குடி கிராமம் நரிக்குறவர் காலனியில் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுசம்பந்தமான சி.டி.யை சமர்ப்பித்துள்ளேன். ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாளர்கள் இருப்பதற்கு இது ஒரு உதாரணம். எனவே அந்தத் தொகுதியின் வேட்பாளர் அன்வர் ராஜா மற்றும் ஓட்டுக்காக பணம் கொடுத்த அந்த கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்