எய்ட்ஸை கட்டுப்படுத்த பாலியல் கல்வியை கட்டாய பாடமாக்குவது அவசியம்: ப.சிதம்பரம்!

திங்கள், 16 ஜூன் 2008 (12:27 IST)
''எய்ட்ஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த பாலியல் கல்வியை கட்டாய பாடமாக்குவது அவசியமாகிறது'' என்று மத்திய நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் கூறினார்.

கோவை அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையத்தில், என்.எம்.சி.டி. தொண்டு நிறுவனம் சார்பில் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அபய இல்ல‌த்தை ‌திற‌ந்து வை‌த்து மத்திய அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் பேசுகை‌யி‌ல், எய்ட்ஸ் நோய் பாதித்த பெண்கள், கருவுற்றால் குழந்தைகளையும் பாதிக்கும். இதனை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் வந்துவிட்டன. எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க வேண்டும். ஒருவிஷயத்தை பொத்தி, பொத்தி வைப்பது மிகப்பெரிய குற்றமாகும்.

வெளியில் பேசக்கூடாது என்பதால் எந்த பயனும் கிடையாது. பாலியல் உணர்வு என்பது மனிதன் தோன்றியபோதே உருவான ஒன்றாகும். இதுஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல.

உணவு உண்பது, உடை உடுத்துவது போன்ற இயல்பான ஒன்றுதான் இதுவும். கடந்த கால ஆட்சியின்போது தூர்தர்ஷனில் `காண்டம்' என்ற சொல்லை கூட பயன்படுத்த கூடாது என்று தடைவிதித்தார்கள். இந்த தடை தேவையற்ற ஒன்றாகும். எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட இதுதொடர்பாக அதிகம் பேசப்படவும், எழுதப்படவும் வேண்டும்.

வயது முதிர்ந்த குழந்தைகளான 12, 13 வயது குழந்தைகளுக்கு, பாலியல் தொடர்பாக பள்ளியில் ஒரு பாடமாக வைக்கலாம். உடல் கூறுகள் தொடர்பாக போதிக்கலாம். கல்லூரிகளிலும் எடுத்துச்சொல்லலாம் எ‌ன்று ‌சித‌ம்பர‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்