எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள்: அதிமுகவினருக்கு விஜயகாந்த் எச்சரிக்கை

ஞாயிறு, 12 பிப்ரவரி 2012 (15:29 IST)
எங்களை வம்புக்கு இழுத்தால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட தேமுதிக பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது.

இதில் அக்கட்சி தலைவரான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம்.எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை.சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர். இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

26 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் புடைசூழ சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்காக அறிவித்துள்ளனர்.தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்பே இதை செய்துள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர்.

என் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதற்கும் நான் பயப்படப்போவதில்லை. மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை கொடுக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லாமல் இதையெல்லாம் எப்படி பயன்படுத்த முடியும்? நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவை பொது மக்களுக்கு சேருவதை நான் தடுக்க மாட்டேன்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதிமுக எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்றும், டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்றும் கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்