ஊட்டியில் கோடைத் திருவிழா

சனி, 11 மே 2013 (12:52 IST)
FILE
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, நாய் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஊட்டி களை கட்டியுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 4 ஆம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ரோஜா பூங்காவில் 12வது மலர் கண்காட்சி இன்று (11 ஆம் தேதி) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.

பல்வேறு மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் மலர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் சத்திய பிரதா சாகு, தோட்டக்கலை இணை இயக்குனர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று 111வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. அதில் 450 நாய்கள் பங்கேற்றன. வரும் 12 ஆம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்