ஈழ மக்களுக்கு உணவு, மருந்து வழக மத்திய அரசு அனுமதி தர வேண்டும்-வைகோ

Webdunia

சனி, 8 செப்டம்பர் 2007 (13:29 IST)
சிறிலங்க அரசு பொருளாதார தடையாலும், போக்குவரத்து முடக்கத்தாலும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள யாழ்ப்பாண மக்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அவர்களுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

திருச்சியில் இன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர், யாழ்ப்பாண மக்களுக்காக சேகரிக்கப்பட்ட மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிய வாகனப் பயணத்தை துவக்கி வைத்தனர்.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் வாகனத்தை வழியனுப்பி வைத்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோ, கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள யாழ்ப்பாண மக்களுக்காக சேகரிக்கப்பட்டுள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை வாயிலாக அவர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான ரீதியாக உதவுவதற்கு அனுமதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கூறினார்.

ஆப்ரிக்க நாடுகளுக்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்த மத்திய அரசு, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு அப்படிப்பட்ட உதவிகளைச் செய்வதற்கு எது தடுக்கின்றது என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்