ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்-கருணாநிதி பேச்சு

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2012 (14:26 IST)
இப்டித்தாங்க சொல்லிட்டேயிருக்காரு...!
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது ரத்தம் சிந்துவதை எதிர்த்தும், இந்தியா தலையிட கோரியும், அண்ணா நினைவிடத்தில் 27.4.2009 அன்று சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன்.
ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று டெசோ ஆய்வரங்கத்தில் உரையாற்றிய தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது:-

எங்களின் அழைப்பை ஏற்று, இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. இந்த மாநாடு தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலக நாடுகளில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை விளக்க கூடிய மாநாடு.

ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை சர்வதேச கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டு உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன.

ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது மனிதாபிமானம், மனித உரிமைகள், சுயமரியாதை தொடர்புடையது, ஈழத்தமிழர்கள் பிரச்சினை கால்நூற்றாண்டாக எரிந்து கொண்டிருக்கிற ஒரு பிரச்சினை என்பதை மறக்க முடியாது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அதிகப்படியாக தாமதம் செய்வது, மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தம், மொழி, கலாச்சாரம் இவற்றின் பெயரால் அடக்கு முறைகள் நடைபெற அனு மதிக்க கூடாது. மைனாரிட்டி மக்கள் மெஜாரிட்டி மக்களால் அடக்குமுறைக்கு ஆளாக கூடாது.

இதற்கு முன்பு, 1986-ம் ஆண்டு மே மாதம் 4-ந்தேதி, மதுரையில் `டெசோ' சார்பில் மாநாடு நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஆந்திரா முன்னாள் முதல்- ந்திரி என்.டி.ராமராவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்- மந்திரி பகுகுணா மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து தமிழ் மற்றும் போராளி குழுக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். `டெசோ' மாநாட்டுக்கு முன்னதாக 1985-ல் கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, சேலம் மற்றும் வேலூரில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஈழத்தமிழர் பிரச்சினையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியான மற்றும் உணர்வுப்பூர்வமான ஆத ரவை தி.மு.க. அளித்து வருகிறது. தொடர்ந்து அவர்களுக்கு எப்போதும் உறுதணையாக இருப்போம்.

இலங்கையில் 1983-ல் தமிழர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நானும், பேராசிரியர் அன்பழ கன் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தோம்.

1983-ல் இலங்கை அரசின் `கறுப்பு சட்டம்' நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினோம். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம்.

தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளாக அகதிகளாக இருந்தும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடி யுரிமை அளிக்க வேண்டும் என்று 26.9.2009-ல் காஞ்சீபுரம் மாநாட்டில் வலியுறுத்தினோம்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக 2 முறை தி.மு.க. ஆட்சி `டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. தமிழக சட்டசபையிலும் ஈழத் தமிழர்களுக்காக நீண்ட நேரம் உரையாற்றினேன். கடந்த 2008-ல் பாரிமுனையில் இருந்து செங்கல்பட்டு வரை 60 கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்திட, லட்சக்கணக்கானோரை பங்கேற்க செய்தோம்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது ரத்தம் சிந்துவதை எதிர்த்தும், இந்தியா தலையிட கோரியும், அண்ணா நினைவிடத்தில் 27.4.2009 அன்று சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன்.

இலங்கை அரசு மற்றும் இந்திய வெளியுறவு துறை உத்தரவாதம் அளித்து, அதன் நகல் எனக்கு அனுப்பப் பட்டது. போர் முடிவுக்கு வந்ததாக நினைத்து உண்ணாவிரதத்தை நான் முடித்துக் கொண்டேன்.

இந்த விஷயத்தில் இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றி விட்டது. இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழர்கள் இரண்டாந்தார குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஈழத்தமிழர்கள் புரிந்த தியாகங்கள், அற்புதமானவை. அவர்கள் அனுபவித்த சித்ரவதைகளும், அடக்கு முறைகளும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை.

தமிழர்களின் அன்றாட வாழ்வில் திட்டமிடப்பட `சிங்களமயமாக்கல்' எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதையும் தமிழர்கள் மீது ஏவப்படும் சட்டமீறல் களையும் கொடுமையான இடையூறுகளையும் இவை தெளிவுப்படுகின்றன.

தமிழர்கள், தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான பாதையில் முட்புதர்களும், புதைகுழி களும் நிறைந்துள்ளதை இவை காட்டுகின்றன. தமிழர்களின் வசிப்பிடங்களில் அவசர நிலை அமலில் உள்ளது போன்ற நிலைமையை இலங்கை ராணுவம் உருவாக்கி வருவது வேதனை அளிக்கத்தக்கது.

போருக்கு பிந்தைய புனரமைப்பில் இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் ஜெனீவாவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு பிறகும் இவை மேலும் அதிகம் ஆகியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மீள் குடியமர்வு, நிவாரணம், புணர்வாழ்வு ஆகியவற்றுக்காக அவசர தீர்வு காணப்பட வேண்டும். இடைக்கால தீர்வாக உள்கட்ட மைப்பு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தமிழர்கள் நிம்மதியாக வாழ வகை செய்ய வேண்டியுள்ளது.
சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இதில் அடங்கும்.

நிரந்தர தீர்வாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். ஈழத் தமிழர்களுக்கான ஜனநாயக மற்றும் நடைமுறை தீர்வுகளை ஆய்ந்து உங்களின் மதிப்பிற்குரிய ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நீங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்