ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பும் குளங்கள்

புதன், 20 பிப்ரவரி 2013 (13:26 IST)
webdunia photo
WD
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையினால் குளம், குட்டைகள் நிறைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. பெரியகொடிவேரி பகுதியில் 110 மி.மீ மழையும் சத்தியமங்கலத்தில் 58 மி.மீ மழையும் புன்செய்புளியம்பட்டி பகுதியில் 160 மி.மீ மழையும் பெய்தது. இதன் காரணமாக இப்பகுதியில் காய்ந்து காணப்பட்ட குளம், குட்டைகளில் தற்போது தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

புன்செய்புளியம்பட்டி , டி.என். பாளையம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சில இடங்களில் வீடுகளின் மதில் சுவர் இடிந்தது. பள்ளி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களின் சுற்றுசுவரும் இடிந்தது.

புன்செய்புளியம்பட்டி பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பவானிசாகர் எம்.எல்.ஏ., பி.எல்.சுந்தரம், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் ஆகியோர் சென்று உதவி வழங்கினர். குளம், குட்டை நிரம்புவதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்