இலங்கை வதை முகாம்களில் தமிழர்கள்: உரிமைக்கு குரல் கொடுக்க மதுரையில் நாளை மாநாடு

புதன், 12 ஆகஸ்ட் 2009 (21:00 IST)
இலங்கை இனப் படுகொலைகள் மற்றும் போர் குற்றங்களை வெளிக்கொண்டுவரும் வகையிலும், வன்னி வதை முகாம்களில் சிறைப்பட்டிருக்கும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வகையிலும் 'மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்' சார்பில் மதுரையில் நாளை மாபெரும் மாநாடு நடைபெறுகிறது.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய போர், இரு மாதங்களுக்கு முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது. எனினும் சுமார் மூன்றரை லட்சம் தமிழர்கள் அங்கு போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி வவுனியா வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகள் முகாம்களுக்குள் நிவாரணப் பணிகளை செய்ய சர்வதேச தொண்டு ிறுவனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் அந்த முகாம்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் இளஞர்கள் தினந்தோறும் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்படுகின்றனர்.

தமிழ் பெண்கள் இலங்கை ராணுவத்தால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பசி, பட்டினியால் மடிந்துக்கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற காரணங்களினால், வாரம்தோறும் சுமார் ஆயிரத்து 400 பேர் மரணம் அடைவதாக பிரபல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

எனினும், ஈழத் தமிழர்களின் நிலை குறித்தோ, அவர்களது வாழ்வுரிமை மற்றும் அரசியல் உரிமை குறித்த எதுவும் கூறாமல் இந்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை இனப் படுகொலைகள் மற்றும் போர் குற்றங்களை வெளிக்கொண்டுவரும் வகையிலும், வன்னி வதை முகாம்களில் சிறைப்பட்டிருக்கும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வகையிலும் 'மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்' சார்பில் மதுரையில் நாளை மாபெரும் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அறிஞர்கள், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொள்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்