இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திர மோடி பிரதமராக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் - விஜயகாந்த் பேச்சு

திங்கள், 17 மார்ச் 2014 (12:03 IST)
இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திர மோடி பிரதமராக நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
FILE

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொதுமக்களிடையே பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

20 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் சென்றுள்ளேன். அப்போது ஓசூரில் ஏராளமான சிறு தொழிற்சாலைகள் இருந்ததை பார்த்து வியந்திருக்கிறேன். இன்று அந்த தொழிற்சாலைகளின் நிலை என்ன? அனைத்து தொழிற்சாலைகளும் நலிவடைந்துள்ளன. காரணம் என்ன? மின்சாரம் இல்லை. தொழிற்சாலை உரிமையாளர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் உள்ளனர். தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை தொடங்குவேன் என்றார்கள். ரயில் நிலையம் அமைப்பதாக கூறினார்கள். இந்த மாவட்டம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா என 3 மாநில எல்லையில் உள்ளது. ஆனால் ரயில் போக்குவரத்து இல்லை.

இந்தியா முழுவதும் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திரமோடி பிரதமராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்.

எனக்கு சாதி, மத பேதம் கிடையாது. நமது கூட்டணிக்குள் சண்டை என்கிறார்கள். நமக்குள் எதற்கு சண்டை? தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என போராடி வருகிறோம். நாம் ஏன் சண்டை போட வேண்டும்?. இந்தியா வல்லரசு ஆக வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தை நல்லரசு ஆள வேண்டும். அது மக்களாகிய உங்கள் கையில் உள்ளது.

அமைதி, வளம், வளர்ச்சி என்கிறார்கள். இந்த மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை, ரயில் போக்குவரத்து கிடைக்கவில்லை, இதுதான் வளர்ச்சியா?.

விஜயகாந்த் அ.தி.மு.க.வை மட்டும் திட்டுவதாக கூறுகிறார்கள். அவர்கள்தானே இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தமிழ்நாடு இருண்டு விட்டதாக அ.தி.மு.க. கூறியது. இப்போது வெளிச்சம் வந்துவிட்டதா? ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு செல்லும்போது மட்டும் காவல்துறையினர் உச்சகட்ட பாதுகாப்பு வழங்குகிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு கிடையாதா?

காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து நான் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளேன். அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இவற்றை மத்திய அரசு கொடுத்தாலும், மாநில அரசுதானே அமல்படுத்த வேண்டும். ஆனால் அதை செய்தார்களா? இதற்கு மக்கள் தங்களது ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் மை மூலம் பதில் சொல்ல வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணி. மோடிக்குத்தான் உங்கள் ஓட்டு விழ வேண்டும். அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களியுங்கள்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்