இடி‌ந்தகரை‌யி‌ல் 5ஆ‌ம் தேதி வைகோ உண்ணாவிரதம்

செவ்வாய், 1 நவம்பர் 2011 (12:30 IST)
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ வரு‌ம் 5ஆ‌ம் தேதி இடி‌ந்தகரை‌யி‌ல் உண்ணாவிரதம் இருக்கிறார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை, நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற தொலைநோக்கோடு நடத்தப்பட்டு வருகின்ற அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம், மிகவும் நியாயமான, தேவையான போராட்டம் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் நேராது என்று, ர‌ஷ்ய நாட்டு நிபுணர்கள் தரும் அறிக்கைகளையும், இந்திய அணுசக்தி கமிஷன் தரும் அறிக்கைகளையும், மத்திய அரசு வெளியிட்டு வருகின்றது.

இடிந்தகரையில் போராட்டம் நடத்துகின்ற மீனவ மக்கள், தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கப் பட்டினிப் போர் நடத்துகின்றார்கள். ஆனால், அந்த மீனவ சமுதாய மக்களைக் கொச்சைப்படுத்தியும், களங்கப்படுத்தியும் சிலர் அறிக்கைகள் தருகின்றார்கள். அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பழ.நெடுமாறன் மதுரையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து, நவம்பர் 5ஆ‌ம் தேதி, தென் மாவட்டங்களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திட அழைப்பு விடுத்தார். அந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

நவம்பர் 5ஆ‌ம் தேதி காலை 9 மணி முதல், இடிந்தகரையில், அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து, என்னுடைய தலைமையில், உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும். போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் முன்னிலை ஏற்பார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் இதில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன் எ‌ன்று வைகோ கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்