ஆழ்துளை கிணற்றுக்குள் மேலும் ஒரு குழந்தை விழுந்த பரிதாபம் - உயிருடன் மீட்க போராட்டம்

புதன், 16 ஏப்ரல் 2014 (15:43 IST)
கலசப்பாக்கம் அருகே மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1½ வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
தமிழகத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவது தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரி கிராமத்தில் ஆசிரியர் கணேசன்-தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் ஹர்சன் (வயது 3) என்ற சிறுவன் அங்குள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான்.
 
அந்த குழந்தையை மீட்புக்குழுவினர் 6 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்டு காப்பாற்றினர்.
 
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 1½ வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் அருகே உள்ள பொன்னகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். விவசாயியான இவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தார். 250 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் தண்ணீர் வரவில்லை. இதனால் அதை அப்படியே விட்டுவிட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் துரைக்கண்ணு நேற்று ஆடுகளை மேய்க்க அங்கு சென்றார். அவருடன் அவரது மனைவி ஜெயலட்சுமியும் தனது மகன்கள் சூரியா (வயது 5), சுஜித் (1½) ஆகியோரை அழைத்துச்சென்றார். அவர்களுடன் குழந்தையின் பாட்டி கோவிந்தம்மாளும் துணைக்கு சென்றார்.
 
நேற்று மாலை பாட்டியிடம் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு ஜெயலட்சுமி, அருகில் உள்ள இடத்தில் கீரை பறிப்பதற்காக சென்றிருந்தார். துரைக்கண்ணுவும் சற்று தொலைவில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது சூரியாவும், சுஜித்தும் தனியாக விளையாடிக்கொண்டு இருந்தனர். அருகே மண் குவியல் இருந்ததால் அங்கு அவர்கள் விளையாட சென்றனர். ஆனால் அந்த இடம் மூடப்படாத ஆழ்துளை கிணறு உள்ள இடம் என்பதை யாரும் கவனிக்கவில்லை.
 
இந்நிலையில் திடீரென சுஜித், அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்து விட்டான். உடனே அதனை பார்த்த அவனது அண்ணன் சூரியா, அலறியவாறு தனது தாயாரிடம் சென்று கூறினான். ஜெயலட்சுமியும் கதறியபடியே அங்கு வந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து குழந்தை விழுந்த இடத்தை பார்த்தனர். அது குறித்து அவர்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். ஆழ்துளை கிணற்றுக்குள் 40 அடி ஆழத்தில் சுஜித் சிக்கிக்கொண்டதை பார்த்த அவர் கள் பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து அதன் வழியாக சென்று சுஜித்தை மீட்க முடிவு செய்தனர்.
 
இதனையடுத்து பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தோண்டும் பணி மாலையில் தொடங்கியது. மேலும் குழிக்குள் சிக்கிக்கொண்ட குழந்தை சுவாசிப்பதற்காக ஆக்சிஜனும் செலுத்தப்பட்டது.
 
குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக்குழுவுக்கு கலெக்டர் ஞானசேகரன் தகவல் அனுப்பினார். அதனையடுத்து அரக்கோணத்தில் இருந்தும் வீரர்கள் விரைந்தனர்.
 
குழந்தையை மீட்கும் பணியை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தனர். நேரம் செல்லச்செல்ல பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மீட்பு பணியை துரிதப்படுத்த ஆட்சியர் ஞானசேகரன், மாவட்ட காவல்துறை எஸ்.பி. முத்தரசி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்கள் மீட்பு பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.
 
குழந்தை மீட்கப்பட்டவுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக அங்கு ஆம்புலன்சும் கொண்டு வரப்பட்டது. இரவு நேரம் என்பதால் அதிக வெளிச்சம் உள்ள விளக்குகளும் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் இரவிலும் தொடர்ந்து நடந்தது.
 
இரவு 8.30 மணி அளவில் 20 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது. மேலும் 20 அடி தோண்டிவிட்டால் சிறுவனை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் சுரங்கம் தோண்டும் பணி மேலும் தொடர்ந்தது.
 
இதனிடையே சங்கரன்கோவில் அருகே சிறுவனை மீட்ட மதுரையை சேர்ந்த குழுவினர் ரோபோவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதேபோல் கோவையிலிருந்தும் மற்றொரு மீட்புக்குழுவினர் வந்து கொண்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதன் மூலம் சிறுவனை எப்படியும் உயிருடன் மீட்க அதிகாரிகள் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்