அரசுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம்: ராமதாஸ்

Webdunia

புதன், 4 ஜூலை 2007 (20:56 IST)
தமிழக அரசுக்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்க மாட்டோம் என்றும், தங்கள் செயல்பாடுகள் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமையாது என்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவ ராமதாஸ், தி.மு.க அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், 5 ஆண்டுகள் இது தொடரும் என்றும் கூறினார்.

கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறாததால் தங்களின் பிரச்சனையை பற்றி ஆலோசிக்க முடியவில்லை என்று தெரிவித்த அவர், தற்போது கூட்டுறவு தேர்தல் குறித்து கூட இதுவரை தங்களுடன் எந்த வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றார்.

தி.மு.க உடன் நட்பு முறையில் கூட்டணி வைத்திருப்பதாக அவர் கூறினார். தமிழக அரசுக்கு இனி நெருக்கடி கொடுக்க மாட்டோம் என்றும், தங்கள் நடவடிக்கை நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்