அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இலாகா மாறுகிறது?

செவ்வாய், 3 ஜனவரி 2012 (18:11 IST)
தற்போது தகவல் தொடர்புதுறை அமைச்சராக இருக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கு விரைவில் பொதுப்பணித்துறை அல்லது போக்குவரத்து துறை போன்ற ஏதேனும் முக்கிய துறைகள் ஒதுக்கப்படலம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் எம்.ஜி.ஆர்., காலத்திலேயே கட்சியில் முக்கிய இடத்தில் இருந்தவர்.ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், தோழி சசிகலாவின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்ததால், அவர் சரிவை சந்திக்க வேண்டியதாயிற்று.

இதனால் கொங்குமண்டல சசிகலா கோஷ்டி பொறுப்பாளர் ராவணன் செங்கோட்டையனை டம்மியாக்க, புதிதாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட தன் ஆதரவாளர் கே.வி.ராமலிங்கத்தை பொதுப்பணித்துறை அமைச்சராக்கினார்.

ஆரம்பத்தில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வேளாண்மை துறை ஒதுக்கப்பட்டது. வேளாண்மை துறைக்கு சொந்தமாக டிராக்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் சசிகலா கோஷ்டி தேர்வு செய்த டிராக்டர் ச‌ரியில்லை என்று கே.ஏ.செங்கோட்டையன் கருத்து கூறியதாகவும்,

இதனாலேயே அவர் உடனடியாக வேளாண்மை துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டு டம்மியாக்கப்பட்டதாகவும் அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில் சசிகலா உள்ளிட்ட அவரது கோஷ்டியை சேர்ந்த 14 பேர் அதிமுக. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டனர்.

ஆனாலும் நீக்கப்பட்ட இவர்கள் பின்னர் மீண்டும் இணைந்து விடுவார்கள் என கட்சி பிரமுகர்கள் மத்தியில் லேசான பயம் இருந்தது.

ஆனால் இந்த பயம் பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதில் தெளிவானது.

தற்போது சசிகலா ஆதரவாளராக இருக்கும் ஈரோடு கே.வி.ராமலிங்கத்திடம் இருக்கும் பொதுப்பணித்துறை ஜெயலலிதா விசுவாசியான கே.ஏ.செங்கோட்டையனுக்கு மாற்றப்படலாம் அல்லது செங்கோட்டையனின் விருப்ப துறையான போக்குவரத்து துறை அவருக்கு கொடுக்கப்படாலாம் என அதிமுக வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் சசிகலா கோஷ்டி மூலம் ஆட்சியிலும், கட்சியிலும் பதவி பெற்ற பலர் கே.வி.ராமலிங்கம் மற்றும் ஈரோடு மேயர் மல்லிகா உள்ளிட்ட பலர் தங்கள் பதவி எந்த நேரமும் பதவி பறிக்கப்படலாம் என்று பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்