அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் - சீமான்

புதன், 29 மே 2013 (15:14 IST)
FILE
இஸ்லாமியர்களை குற்றப் பரம்பரையினர் போல எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான விசாரணையைத் தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பிறகு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் சமீப நாட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 14 முஸ்லீம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கர்நாடக காவல் துறையின் பிடியில் உள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர், கோவை கோட்டை மேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல் துறையினர், கைது செய்ய திட்டமிட்டிருந்த இளைஞர்களின் வீடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க எந்த பொருளையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர். ஆனால் கர்நாடக காவல்துறை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 600 கிராம் வெடி பொருட்கள் அந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை கோவை மாநகர ஆணையர் மறுத்துள்ளார். சோதனையின் போது சந்தேகிக்கத்தக்க எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று கோவை மாநகர ஆணையர் தெளிவாக அறிக்கையும் கொடுத்துள்ளார். அது மட்டுமல்ல, இவ்வழக்கில் ஐயத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பீர் முகமதுவுடன் தங்கியிருந்தார் என்று ஒரே காரணத்திற்காக அலியப்பா என்பவரை பிடித்துச் சென்றுள்ளனர். அவரிடம் 3 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளது கர்நாடக காவல் துறை.

ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே, கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமலேயே அவரை காவலில் வைத்து விசாரித்துள்ளனர். “என்னிடம் காவல் துறையினர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலில்லை, எனவே விடுதலை செய்துவிட்டனர்” என்று அலியப்பா பெங்களூருவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார்.

கர்நாடகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அலியப்பாவை விசாரணை செய்துவிட்டு விடுவித்துவிட்டனர். ஆனால், அவரால் எங்கு எப்படி செல்வது என்று கூட தெரியாமல் திணறியுள்ளார். கர்நாடகத்தில் இயங்கி வரும் மக்களுக்கான மனித உரிமை சங்கம் வழிகாட்டி பாதுகாத்து அழைத்து வந்துள்ளது. இந்த நிகழ்வு அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்துள்ளது.

மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்க முற்பட்ட தேச புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), விட்டுவிட்டு சென்றுவிட்டது! ஆனால் கர்நாடக காவல்துறையினர் இன்னமும் தமிழ்நாட்டுக்குள் வந்த முஸ்லீம் இளைஞர்களை விசாரணைக்காக என்ற பெயரில் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே சட்டத்திற்குப் புறம்பாக நடத்துகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாமியர்களை ஏதோ குற்றப் பரம்பரையினர் என்று நடத்துவதாகவே இருக்கிறது. எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான பூர்வாங்க விசாரணையை தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளதே தவிர, அது உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக இல்லை.

ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்குரிய சட்ட ரீதியான வழிமுறைகளை கையாளாமல் கைது செய்வதும், அடிப்படை ஆதாரமின்றி அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதும், குறிப்பிட்ட நபர் சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ளாரே என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயமலும் காவல் துறை செயல்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கோவையில் ஒரு முறை குண்டு வெடிப்பு நடந்துவிட்டது என்பதற்காகவும், என்றோ நடந்த ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் வாழ்ந்த இடம் என்பதற்காகவும், தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவையிலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்துவரும் முஸ்லீம் இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இப்படிப்பட்ட காவல் துறை அத்துமீறல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்விலிருந்து அந்நியப்படும் ஒரு மனநிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்