அன்னை தெரசாவுக்கு அரசு சார்பில் நூற்றாண்டு விழா: முதல்வர் கருணாநிதி

செவ்வாய், 2 நவம்பர் 2010 (10:11 IST)
தமிழக அரசின் சார்பில் அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மாநில அளவில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. 15 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு "அன்னை தெரசா மகளிர் வளாகம்' என பெயரிடப்பட்டுள்ளது.

கட்டடத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து, முதல்வர் கருணாநிதி உரையாற்றியபோது, " கடந்த 1989-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தருமபுரியில் சுய உதவிக் குழுவுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அன்று முதல் தொடங்கி இப்போது ஏறத்தாழ 4 லட்சத்து 74 ஆயிரத்து 874 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்ற அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளன.

இந்தக் குழுக்களில் 73 லட்சத்து 60 ஆயிரம் ஏழை மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்தவும், சென்னைமாநகரில் ஒரு நிரந்தரமான விற்பனை வளாகத்தை அமைக்கும் நோக்குடன் அன்னை தெரசா மகளிர் வளாகம் உருவாக்கப்பட்டது.

நாம் பெண்களை மதிப்பவர்கள்; பெண்களைப் பாராட்டுகின்றவர்கள்; அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கக் கூடியவர்கள்; நலிவடைந்த மக்களுக்காக, அவர்களுடைய நலனை அடிப்படையாக வைத்து நாளும் தொண்டாற்றிய அன்னை தெரசாவின் நூற்றாண்டு நாள் விழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.

வெப்துனியாவைப் படிக்கவும்