அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளை மூட நடவடிக்கை: த‌மிழக அரசு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பதில்

வெள்ளி, 18 டிசம்பர் 2009 (11:09 IST)
வேதாரண்யம் அருகே நடந்த பள்ளிக்கூட வேன் விபத்தை தொடர்ந்து, அனுமதியின்றி செயல்படும் பள்ளிக்கூடங்களை மூட தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று த‌‌மிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பதில் தெரிவித்துள்ளார்.

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு பஞ்சாயத்து தலைவர் பழனியப்பன் பொதுநலன் கருதி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்த மனுவில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கத்திரிபுலம் கிராமத்தில் பள்ளிக்கூட வேன் ஒன்று கடந்த 3ஆ‌ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில், 9 பள்ளிக்கூட குழந்தைகள் மரணம் அடைந்தனர்.

'கலைவாணி மகா மெட்ரிக்' பள்ளிக்கூடத்துக்கு வழங்கிய அனுமதி கடந்த மே மாதம் 31ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின்னர், இந்த பள்ளிக்கூடத்துக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதியில்லாமலேயே இந்த பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த பள்ளிக்கூடம் வாடகைக்கு வேன் எடுத்து பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்தது. இப்படிப்பட்ட வேன்தான் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த வேனுக்கு முறையாக அனுமதியும் பெறவில்லை. எனவே, இந்த விபத்தினால் மரணம் அடைந்த 9 குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடத்தின் சார்பில் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கூட தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே, தாளாளர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் ஏராளமான பள்ளிக்கூடங்கள் நடந்து வருகின்றன. எனவே, தலைமை செயலருக்கும், பள்ளி கல்வி செலருக்கும் ‌நீ‌திம‌ன்ற உத்தரவை பிறப்பித்து, அனுமதி இல்லாத பள்ளிக்கூடங்கள் பற்றிய விவரத்தை புள்ளி விவரங்கள் எடுத்து ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட வேண்டும். பள்ளிக்கூட வேன்களை முறையாக இயக்குவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் எ‌ன்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ராஜாகலிபுல்லா ஆஜராகி வாதாடினார். அரசு அனுமதியின்றி செயல்படும் பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும், பள்ளிக்கூடங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு வழ‌க்க‌றிஞ‌ர் அவகாசம் கேட்டதால், இந்த வழக்கு விசாரணை 6 வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இந்த வழக்கில் பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிகுலேஷன் கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளிக்கூட தாளாளருக்கு தா‌க்‌கீது அனுப்பவும் ‌நீ‌திப‌திக‌ள் உத்தரவி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்