அதிமுக-தேமுதிக போஸ்டர் யுத்தம்: விஜயகாந்த் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

ஞாயிறு, 12 பிப்ரவரி 2012 (14:14 IST)
அதிமுக-தேமுதிக இடையே நடைபெற்று வரும் போஸ்டர் யுத்தம் காரணமாக விஜயகாந்த் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த வாரம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை கேலி செய்யும் வகையில் அதிமுக வினர் போஸ்டர் ஒட்டினார்கள்.

இதற்கு பதிலடியாக "அல்லிராணியும் அடிமைகளும்" என்ற தலைப்பில் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை கேலி செய்யும் வகையில் தேமுதிகவினர் நேற்று மதியம் போஸ்டர் ஒட்டினார்கள்.

சாலி கிராமம் கண்ணம்மாள் தெருவில் உள்ள விஜயகாந்த் வீட்டு சுவற்றிலும் அருகில் உள்ள வீட்டு சுவர்களிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து அதிமுகவினர் ஆத்திரம் அடைந்தனர்.போஸ்டர் ஒட்டியதற்கு 129 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் செந்தில்பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது ஆதரவாளர்களுடன் சென்று விஜயகாந்த் வீட்டு சுவற்றில் ஒட்டியிருந்த போஸ்டரை கிழித்தார்.கற்களும் வீசப்பட்டது.

இதையறிந்ததும் அங்கு திரண்டுவந்த தேமுதிகவினர்,வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் இருதரப்பினருக்குமிடையே கை கலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக கவுன்சிலர் செந்தில் பாண்டியன், தேமுதிக நிர்வாகி வி.என். ராஜன் ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த போஸ்டர் யுத்தம் காரணமாக மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டு முன்பு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கட்சி நிர்வாகியின் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள மதுரை சென்றிருந்த விஜயகாந்த்,இது குறித்த தகவல் அறிந்ததும்,சென்னை விரைந்து வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்