அதிமுக ஆட்சியின் கொடூரங்களை மக்கள் மறக்கக் கூடாது - மு.க.ஸ்டாலின்

Ilavarasan

வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (17:50 IST)
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல திமுக ஆட்சியின் அருமையை இப்போது மக்கள் உணர்கிறார்கள். இந்த ஆட்சியின் மூன்றாண்டு கால கொடூரங்களை மக்கள் மறக்கவில்லை, மறக்கவும் கூடாது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
 
இது குறித்து அவர் பேசுகையில்,ஜெயலலிதா ஆட்சியில் ஏறிய விலைவாசியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதை மறந்து விடுவார்களா? 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா என்ன சொன்னார்? விலைவாசி உயர்வினால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் செயலற்ற தன்மையால். சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்த உடனேயே, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ஏறத்தாழ 4ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தினார் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, பல முறை டீசல் விலை உயர்ந்தபோதும் தி.மு.க ஆட்சியில் ஒரு முறைகூட ஏற்றாத பஸ் கட்டணத்தை உயர்த்தினார்.
 
அதுபோல பால்விலையை உயர்த்தினார். மின்வெட்டினால் மக்கள் கடும் அவதிப்பட்டுக்கொண்டிருக்க, இல்லாத மின்சாரத்திற்கும் கட்டணத்தை உயர்த்தியவர்தான் ஜெயலலிதா.
 
ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டில் உடனடியாக ஏன் இதை ஜெயலலிதா செய்தார் என்றால், மூன்றாண்டுகள் கழித்து 2014ல்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரும். அதற்குள் மக்கள் இந்த விலைவாசி உயர்வையும் கட்டண உயர்வையும் மறந்துவிடுவார்கள் என்பதால்தான். ஆனால், மக்களால் மறக்க முடியாத அளவிற்கு கட்டணங்களும் விலைவாசி உயர்வும் இன்று வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. வாக்குறுதி கொடுத்து வஞ்சித்த ஜெயலலிதாவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாடம் கற்பிக்கத் தயாராகிவிட்டார்கள் என்று ஸ்டாலின் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்