வாழைக்கு சுண்ணாம்பு உரமிடும் ஈரோடு விவசாயிகள் (படம்)

திங்கள், 1 அக்டோபர் 2012 (11:43 IST)
webdunia photo
WD
ஈரோடு பகுதியில் வாழை செழிப்பாக வளர விவசாயிகள் தற்போது சுண்ணாம்பு உரம் வைக்கும் புதிய முறையை கையாண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் இருபத்தி ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் வருமானம் அதிகமாக கொடுப்பது செவ்வாழையாகும். இதனால் செவ்வாழை பயிரிடவே விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆண்டு பயிராக கருதப்படும் வாழை நன்றாக நோயின்றி வளர்ந்து நல்ல விலைக்கு விற்பனையானால் விவசாயிக்கு அதிகலாபம் கிடைக்கும். அதே வாழை அறுவடை நேரத்தில் இயற்கை சீற்றம் ஏற்பட்டு சூறாவளி வீசினால் அடியோடு வாழை நாசமாகும்.

ஆகவே வாழை நடவு செய்துள்ள விவசாயிகள் வாழையை குழந்தைபோல் காக்கவேண்டும் என்பார்கள். காற்று வருவதற்கு முன்பாகவே ஒவ்வொறு வாழைக்கும் நவீன முறையில் பெல்ட் கட்டலாம் அல்லது கடந்த காலங்களைபோல வாழைக்கு மரத்தின் மூலம் தாங்கல் கொடுக்கலாம்.

இந்த நிலையில் நடப்பு காலங்களில் வாழைக்கு போதிய சுண்ணாம்பு சத்து கிடைக்காத காரணத்தால் வாழை திறன் இல்லாமல் காணப்படுவதாகவும் இதன் காரணமாக பல்விதமான நோய்கள் வாழையை தாக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் விவசாயிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் வாழை செடியாக இருக்கும்போதே அதற்கு போதிய அளவு சுண்ணாம்பு சத்து சேருவதற்காக வாழை செடியின் அடிபாகத்தில் நேரடியாக சுண்ணாம்பு வைக்கும் புதிய யுக்தியை சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

சுண்ணாம்பு வைக்கப்பட்ட வாழையின் வளர்ச்சிக்கும் சுண்ணாம்பு வைக்காத வாழையின் வளர்ச்சிக்கும் நன்றாக வித்தியாசம் தெரிவதாக வாழை விவசாயிகள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்