தமிழ்நாடு தொழில் பாதுகாப்புப் படை வாரியம் - ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், 24 ஏப்ரல் 2012 (20:26 IST)
வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் காவலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு தொழில் பாதுகாப்புப் படை வாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டபேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அப்போது, வங்கிகள், சில மத்திய அரசு நிறுவனங்கள் முதலியவற்றின் அன்றாட காவல் பணிகளுக்காக காவல் துறையினர் பணி அமர்த்தப்படுகின்றனர். இதனால் காவல் துறையில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல்; குற்றப் புலனாய்வு போன்ற வழக்கமான பணிகளுக்காக கிடைக்கப் பெறும் காவல் துறையினரின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.

வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் காவலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு தொழில் பாதுகாப்புப் படை வாரியம் அமைக்கப்படும். இந்தப் படை ஒரு காவல் துறை உயர் அதிகாரியின் தலைமையின் கீழ் இயங்கும். படையின் பயிற்சியாளர்களாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளும்; ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் அமைவர்.

நன்கு பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த தனியாரைக் கொண்டு இயங்கும் இந்த படை, கட்டணத்தை வசூலித்துக் கொண்டு வங்கிகள், இதர நிறுவனங்கள் முதலியவற்றில், காவலர்களை, பாதுகாப்புப் பணிகளுக்காக, பணி அமர்த்தும்.

சென்னையில் மெரினா, எலியட்ஸ் மற்றும் திருவான்மியூர் முதலிய கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளை திறம்பட மேற்கொள்ள 30 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து நிலப் பரப்பிலும் இயங்கக் கூடிய 9 வாகனங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்